நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் யாரும் செய்யாத சாதனை.... நோபல் பரிசுக்காக மீண்டும் ஆரம்பித்த ட்ரம்ப்
இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இது, வேறு எந்த ஜனாதிபதியும் செய்யாத சாதனை” என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு தான் முழுத் தகுதியுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (7) வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளதால் பல இடங்களுக்கு சென்று ட்ரம்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முக்கியமான சில பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு வொஷிங்டன் திரும்பிய பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு முன்னரும் பல முறை ட்ரம்ப், நாடுகளுக்கிடையே இடம்பெற்ற பல போர்களை தானே நடுநிலை வகித்து முடிவுக்குக் கொண்டு வந்ததாக கூறிவந்தார்.
அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான், இஸ்ரேல் - ஈரான், கம்போடியா - தாய்லாந்து, செர்பியா - கொசோவோ, ருவாண்டா - கொங்கோ, எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஸர்பைஜான் ஆகிய யுத்தங்களை தானே முடித்து வைத்ததாக குறிப்பிட்டார்.
எனினும், அவர் குறிப்பிட்ட போர்களில் சில, உலகளாவிய ரீதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு பெற்ற போர்கள் அல்ல என்றும் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், நோபல் பரிசுக்காக தனது பெயரை பல்வேறு சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கும் முயற்சியில் ட்ரம்ப் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.