ட்ரம்ப் ஒரு குற்றவாளி ; கமேனியின் கருத்துக்களால் வலுக்கும் போர் பதற்றம்
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

ஈரான் வன்முறை
ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரான் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காரணமாக போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.
கமேனி "போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியின்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகப் பேசி, கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு, "நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம்" என்று கூறினார்.
அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறோம்.
போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள். அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர். மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர். இவ்வாறு கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.