சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை; வெளியேறினால் 3,000 டொலர்
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் குடியேறிகள் இவ்வருட இறுதிக்குள் நாட்டை விட்டுத் தாமாகவே வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஏற்கனவே 1,000 டொலராக இருந்த இந்தத் தொகை, தற்போது கிறிஸ்துமஸ் கால விசேட சலுகையாக 3,000 டொலராக மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள்
CBP Home' (முன்னர் CBP One) எனும் செயலி மூலம் இதற்காகப் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சலுகை வரும் 2025 டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
தாமாக வெளியேறுபவர்களுக்கு இலவச விமானப் பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக விதிக்கப்படும் சிவில் அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம்இது குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள்.
அவ்வாறு கட்டாயமாக வெளியேற்றப்படுபவர்கள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2025 ஜனவரி முதல் இதுவரை சுமார் 1.9 மில்லியன் குடியேறிகள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்து நாடு கடத்த சுமார் 17,000 டொலர்கள் வரை செலவாகும் என்பதால், இந்தத் தன்னார்வ வெளியேற்றத் திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.