ஆபாச படநடிகை சர்ச்சையால் நீதிமன்றம் செல்லும் டிரம்ப்; கைதாவாரா?
ஆபாச படநடிகை விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் சமூகமளிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
டொனால்ட் டிரம்ப் நியுயோர்க் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதால் அவரை கைதுசெய்வதற்கான பிடியாணை வழங்கப்படவேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
டிரம்பிடம் தனிப்பட்ட விமானங்கள் உள்ளன இதன் காரணமாக அவர் நியுயோர்க்கின் விமானநிலையங்களில் ஒன்றிற்கு சென்று பின்னர் கார் மூலம் நீதிமன்றம் செல்வார்.
டிரம்பின் கைவிரல் அடையாளங்கள் பதியப்படும்
டிரம்ப் வழமையான பாதையில் ஊடகங்களிற்கு மத்தியில் நீதிமன்றம் செல்லாமல் வேறு தனிப்பட்ட வழியாக நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படலாம். எனினும் உள்ளே நுழைந்ததும் டிரம்பின் கைவிரல் அடையாளங்கள் பதியப்படும் ஏனைய குற்றவாளிகளை போல அவரது பொலிஸ் புகைப்படம் எடுக்கப்படும்.
டிரம்ப் தனக்கு சட்டத்தரணியை வைத்துக்கொள்வதற்கும் பொலிஸாருடன் பேசுவதை தவிர்ப்பதற்கும் அரசியல் அமைப்பு அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட உரிமை உள்ளதை வலியுறுத்தும் மிரண்டா உரிமைகளை வாசிப்பார்.
குற்றம்சாட்டப்பட்ட பிரதிவாதிகள் தற்காலிகமாக கைவிலங்கிடப்படுவார்கள். எனினும் டிரம்பிற்கு கைவிலங்கிடப்படுவதை தடுப்பதற்கு அவரின் சட்டத்தரணிகள் முயற்சி செய்வார்கள் .
இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் காலம் முழுவதும் இரகசியசேவையை சேர்ந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் காணப்படுவார்கள் . இதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் தோன்றுவதற்கு முன்னர் காத்திருப்பு பகுதியில் அல்லது சிறைக்கூட்டில் டிரம்ப் நிற்கவேண்டியிருக்கும்.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதி தெரிவுசெய்யப்பட்டதும் விசாரணை இடம்பெறவுள்ள காலம் பயணதடைகள் பிணைகள் போன்ற விபரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
தவறான நடத்தைக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்,உடல்ரீதியான தாக்குதல் குறித்து குற்றம்சாட்டப்பட்டால் நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.