அமெரிக்க அதிபருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது; ஈரானிய ஆலோசகர் எச்சரிக்கை!
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் விடுத்தஎச்சரிக்கைக்கு, ஈரானிய உயர்மட்ட தலைவரின் ஆலோசகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.
அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்சார்ந்த உட்கட்டமைப்புகள் மற்றும் மின் நிலையங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் பாயும் என ஈரான் எச்சரித்துள்ளது.

பிரமையில் வாழும் நபரின் பேச்சுகள்
அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தல்களை “பிரமையில் வாழும் நபரின் பேச்சுகள்” என வர்ணித்துள்ள ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகர் மோஹ்சன் ரெசாய், ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பன்மடங்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானியப் படைகள் தொடர்ந்து தங்களின் இறையாண்மையை நிலைநாட்டும் என்றும், அமெரிக்காவின் எந்தவொரு தவறான கணக்கீடும் அவர்களுக்குப் பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரானின் தெற்குப் மாகாணங்களிலுள்ள முக்கியப் பாலங்கள், மின் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாகப் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், பதிலடி தாக்குதலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீதும் ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே முந்தைய அமைதி உடன்படிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், அமெரிக்கா தனது தாக்குதல் எல்லையை விரிவாக்க முயல்வது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மீள முடியாத முழு அளவிலான போருக்குள் தள்ளும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.