ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை ; மத்திய கிழக்கில் மீண்டும் போர்
ஈரான் அணுசக்தித் திட்டம் அல்லது ஏவுகணைத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லகோ (Mar-a-Lago) இல்லத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த பின், ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அத்துடன் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மட்டுமன்றி, அதன் ஏவுகணை வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக அவர் முதல் முறையாகக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் "கடுமையான மற்றும் வருந்தத்தக்க வகையில்" பதிலடி கொடுக்கப்படும் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் நீடித்த போரில் 1,100-க்கும் மேற்பட்ட ஈரானியர்களும், 28 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
அந்தப் போரில் ஈரானின் 1,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 11 அணுசக்தி விஞ்ஞானிகளை இஸ்ரேலியத் தாக்குதல்கள் அழித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த போரில் அழிந்த ஏவுகணை இருப்பை ஈரான் மீண்டும் இரகசியமாக அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் தமது அணுசக்தி நடவடிக்கைகள் அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்றும், ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த தொடர்ச்சியான மோதல் போக்கு, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டுமொரு நேரடிப் போர் வெடிக்கும் என்ற அச்சத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.