எந்த நாடாக இருந்தாலும் நிச்சயம் இது நடக்கும் ; உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்றாண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இப்போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை.

கூடுதல் வரி
இதை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இதன் பிறகும் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மிகவும் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் நேற்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சில செனட் உறுப்பினர்கள், மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் மறு விற்பனை செய்யும் நாடுகளுக்கு, 500 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு, ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.