இடிந்து விழுந்த தாமிரச் சுரங்கத்தின் பாலம் ; 32பேர் பலி
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் தெற்கு மாகாணமான லுவாலபாவில் உள்ள கலாண்டோ சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

சுரங்கத்துக்குள் செல்ல தடை
இது குறித்து மாகாண உள்துறை அமைச்சா் கூறியதாவது: முலோண்டோ பகுதியில் அமைந்துள்ள கலாண்டோ சுரங்கப் பாலத்தில் அளவுக்கு அதிமானவா்கள் சென்றதால் அது சுமை தாங்காமல் இடிந்து விழுந்த விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.
தொடா்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததால், அந்த சுரங்கத்துக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மீறி சட்டவிரோதமாக தாமிரத் தாதை சேகரிக்கும் கும்பல் அந்த சுரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்தது என்றாா்.
இருந்தாலும், காங்கோவின் சிறிய சுரங்கப் பணிகள் மற்றும் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கப் பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பீதியடைந்தவா்கள் அந்தப் பாலத்தில் ஓடியதால் அது இடிந்துவிழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்படுவது காங்கோவில நீண்டகாலமாகவே சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாதுவளம் நிறைந்த காங்கோவின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினருக்கும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் நிலவிவருகிறது. இந்தச் சூழலில், சுரங்கப் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.