உலக மக்களை அச்சத்தில் உறைய வைத்த ட்ரம்ப் ; உலகையே 150 முறை அழிக்கும் அணு ஆயுதம்
இந்த உலகத்தையே 150 முறை அழிக்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதால், அமெரிக்காவும் மீண்டும் சோதனைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா சமீபத்தில் கடலுக்கடியில் இயங்கும் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி உள்ளிட்ட அணு ஆயுத அமைப்புகளைச் சோதனை செய்தது.

அணு ஆயுத சோதனை
இதற்குப் பதிலடியாக, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருந்த அமெரிக்கா, மீண்டும் சோதனைகளை உடனடியாகத் தொடங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், அணு ஆயுத மூலப்பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுடன் 2000ம் ஆண்டில் செய்துகொண்ட புளூட்டோனியம் அழிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புதின் கையெழுத்திட்டார்.
இந்தச் சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘அணு ஆயுத சோதனை என்பது முக்கியமான விஷயமாக இருந்தாலும், மற்ற நாடுகள் சோதனை செய்வதால் நாமும் சோதனை செய்வது பொருத்தமானது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறுகையில், ‘ரஷ்யாவும், சீனாவும் அணுஆயுத சோதனை நடத்துகின்றன. ஆனால் அதைப்பற்றி அவர்கள் வெளியே பேசுவதில்லை. நாங்கள் வெளிப்படையான சமூகம்.
நாங்கள் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும். அவர்கள் சோதனை செய்வதால் நாங்களும் சோதனை செய்யப் போகிறோம். வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. மேலும்
பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது. ஆயுதங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். மற்ற நாடுகள் சோதனை செய்யும்போது, நாங்கள் மட்டும் சோதனை செய்யாத ஒரே நாடாக இருக்க நான் விரும்பவில்லை.
எந்த நாட்டையும் விட எங்களிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. . மேலும், அணு ஆயுத சோதனைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன’ என்று ட்ரம்ப் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.