சீக்கிய படைவீரர்களை கௌரவித்த கனடா
கனடிய அரசாங்கம் சீக்கிய கனடிய படைவீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிட்டுள்ளது.
கனடா தபால் திணைக்களம் 18வது ஆண்டு சீக்கிய நினைவு தின நிகழ்வில், சீக்கிய கனடியப் படைவீரர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் புதிய நினைவு தபால் தலை (commemorative stamp) ஒன்றை முதன்முறையாக வெளியிட்டது.
இந்த தபால் தலை, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான சீக்கியர்களின் இராணுவ சேவை வரலாற்றை நினைவுகூருகிறது.

இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி
முதல் உலகப் போரின்போது கனடிய இராணுவத்தில் சேர அனுமதி பெற்ற முதல் 10 சீக்கிய வீரர்களிலிருந்து தொடங்கி, இன்று சேவையில் உள்ள சீக்கியர்கள் வரை அனைவருக்கும் இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒன்டாரியோ மாகாணம் கிச்சனரில் உள்ள பிரைவேட் பகம் சிங் அவர்களின் இராணுவ கல்லறையில் நடைபெற்றது.
இது கனடாவில் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் பணியாற்றிய சீக்கிய வீரர்களின் ஒரே அறியப்பட்ட கல்லறை ஆகும்.
பகம் சிங், முதல் உலகப் போரின்போது கனடிய இராணுவத்தின் 20வது இன்பன்ட்ரி படை பிரிவில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் பணியாற்றினார்.
அவர் போரில் காயமடைந்து, 1919 ஆம் ஆண்டு கிச்சனர் இராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவருக்கு முழுமையான இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாக சீக்கிய சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பகம் சிங் அவர்களின் கல்லறையில் ஒன்று சேர்ந்து நினைவு நிகழ்வை நடத்தி வருகின்றனர்.