சட்டவிரோதமாக கனடாவிற்குள் பிரவேசித்த 4 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமெரிக்கா-கனடா எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா எல்லை சேவை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லை அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிய மூவர், வாஷிங்டனின் லிண்டன் பகுதியில் உள்ள நார்த்வுட்ஸ் சாலையில் இருந்து கனடாவின் அபோட்ஸ்ஃபோர்ட் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் அனைவரும் மேலும் விசாரணைக்காக கனடா எல்லை சேவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இதற்கு முந்தைய மாதம் செப்டம்பர் 24 மற்றும் 25 திகதிகளில், அதே அபோட்ஸ்ஃபோர்டு எல்லை பகுதியில் இரண்டு நாட்களில் ஐந்து பேர் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ள இருவர் தனித்தனியாக முயன்றவர்கள் என தெரிவிக்கப்பட்டது.