ரஷ்யா–உக்ரைன் யுத்தம் ; அமைதி பேச்சுக்கு முன் டிரம்ப் அதிரடி அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளவில் பல மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறியுள்ள நிலையில், ரஷ்யா–உக்ரைன் போரை முடிப்பது மட்டும் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பல பிராந்திய மோதல்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து–கம்போடியா இடையிலான பதற்றங்களை உட்பட, மொத்தம் எட்டு போர்களை தாம் நிறுத்தியதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இதற்காக தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் உலகம் முழுவதும் அமைதியை கொண்டு வர முயற்சி செய்கிறோம்.
வெறும் 10 மாதங்களில் எட்டு போர்களை முடித்துள்ளேன். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் மிகவும் சிக்கலானது. நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அது தொடர்கிறது,” என்றார்.
மேலும், ஒரு தரப்பு மட்டும் அமைதியை விரும்பினால் போதாது என்றும், இரு தரப்பினரும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே அமைதி முயற்சி வெற்றியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் நாட்டின் ஜெனிவாவில், அமெரிக்கத் தரப்பு முன்னிலையில் ரஷ்யா–உக்ரைன் இடையே புதிய அமைதி பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.