நீங்கள் 'ஆம்' என்று மட்டும் சொன்னால் போதும்; இந்திய வம்சாவளி மேயரிடம் சமாதானமான ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ 'பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என ட்ரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூயார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என ட்ரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார்.

வெள்ளை மாளிகையில் சந்திப்பு
இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அவர்களின் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின் போது டிரம்ப் மம்தானியுடன் இணக்கமாக நடந்து கொண்டார். மேலும் சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இது மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள சந்திப்பு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசுகையில், "நாங்கள் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம், இது ஒரு நல்ல, மிகவும் பயனுள்ள சந்திப்பு. நாங்கள் இருவரும் நேசிக்கும் இந்தப் நகரம் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு இலக்கு எங்களிடம் உள்ளது.
நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வீட்டுவசதி மற்றும் உணவு விலைகள் போன்ற சில விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்" என்று தெரிவித்தார். மேலும் "நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேயரைப் பெறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
அவர் சிறப்பாகச் செயல்பட்டால், நான் மகிழ்ச்சியடைவேன். இதில் கட்சி வேறுபாடு இல்லை என்று நான் சொல்வேன். உண்மையில், அவர் சில பழமைவாதிகளுக்கும், சில தீவிர தாராளவாதிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் , நீங்கள் இன்னும் டிரம்ப்-ஐ பாசிஸ்ட் என கருதுகிறீர்களா என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது பேசிய மம்தானி பதிலளிக்க முற்பட்டார். அப்போது டிரம்ப் குறுக்கிட்டு, "பரவாயில்லை, நீங்கள் 'ஆம்' என்று மட்டும் சொன்னால் போதும்.
அதை விளக்குவதைவிட அது எளிது. ஐ டோன்ட் மைண்ட். தேட்ஸ் ஓகே. அதை விட மோசமாக கூட நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறி மம்தானியை தட்டிக்கொடுத்தார். நீங்கள் என்னை 'பாசிஸ்ட்' என்று தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லை என டிரம்ப் காட்டிய காட்டிய இணக்கம் பலரை கவர்ந்துள்ளது.