பெண்ணை சுட்டுக் கொன்ற அதிகாரி விவகாரம் ; ட்ரம்ப் விளக்கம்
அமெரிக்காவின் மினியாபோலிஸில் , குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் அதிகாரியை சிற்றூந்தால் மோத முயன்றதே காரணம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மினியாபோலிஸில் 37 வயதான பெண் ஒருவர் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது போன்ற சூழ்நிலைகளில் வாகனத்தை நோக்கிச் சுடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ட்ரம்ப் பதிலளிக்கையில், "அவர் மிகவும் மோசமாக நடந்துகொண்டார்.
அவர் அதிகாரியை சிற்றூந்தால் மோதினார். அவர் மோத முயற்சிக்க மட்டும் செய்யவில்லை, மோதிவிட்டார்" என்று கூறினார்.
பின்னர், அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொளி காட்சிகளை ட்ரம்ப் திரையிட்டுக் காட்டினார். "இது போன்ற சம்பவங்கள் நடப்பதை நான் விரும்பவில்லை" என ட்ரம்ப் கூறினார்.
இந்தச் சம்பவத்தை வன்முறையானது என்று விவரித்த அவர், "அங்கு நடந்த சூழல் மிகவும் கொடூரமானது" என்று குறிப்பிட்டார்.