அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது ; ட்ரம்பின் அலற விடும் உத்தரவு
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், எண்ணெய் நிறுவனங்களை உடனடியாக முதலீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சமீபத்தில் கைது செய்தன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் நிர்வாகம் மற்றும் எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், ரஷ்யா அல்லது சீனா இந்த வளங்களைக் கைப்பற்றியிருக்கும். தற்போது அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; பாதுகாப்புக்காகப் பிரம்மாண்டமான கடற்படை நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் செவ்ரான், எக்ஸான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘இனிமேல் நீங்கள் வெனிசுலா நிர்வாகத்திடம் பேசத் தேவையில்லை; நேரடியாக எங்களுடன்தான் பேச வேண்டும். சிதிலமடைந்துள்ள கட்டமைப்பைச் சீரமைக்க 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும்’ என்று கறாராகத் தெரிவித்தார்.