ரிஷி சுனக் உருவாக்கிய திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் டிரம்ப்!
பிரித்தானியாவில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கம் உருவாக்கிய திட்டம் ஒன்றை தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சட்டவிரோத புலம்பெயர் மக்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் குறித்தே ட்ரம்ப் அணி ஆய்வு மேற்கொண்டுள்ளது. குறித்த திட்டமானது பிரித்தானியாவின் தற்போதைய கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தால் கைவிடப்பட்டது.
புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டம்
இந்த நிலையில் அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் சாத்தியங்கள் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் அணி தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் சட்டவிரோத புலம்பெயர் மக்களை கட்டாயம் வெளியேற்றுவேன் என்றே ட்ரம்ப் பரப்புரை செய்து வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சுமார் 20 மில்லியன் புலம்பெயர் மக்களை அவர் எவ்வாறு வெளியேற்றுவார் என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.
அதேவேளை முன்னர் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கம் முன்னெடுத்த ருவாண்டா திட்டத்தை ட்ரம்ப் அணி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. ட்ரம்பின் அணியினரும் அதை உறுதி செய்துள்ளதாகவும் கூறபடுகின்றது.
ருவாண்டா மட்டுமின்றி, இன்னும் சில நாடுகளில் சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டத்தையும் ட்ரம்ப் செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வரும் 2025 ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும் பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவார் எனவும், அவற்றில் மிகவும் முதன்மையானது எல்லையை மூடுவதாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது.
ஜோ பைடன் நிர்வாகம் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்ததால் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை தற்போது 20 மில்லியனை எட்டியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.