90 நிமிடங்கள் தொலைபேசி உரையாடிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புதின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், மத்திய கிழக்கு போர் மற்றும் உக்ரைன் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
தொலைபேசி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ஏ.எஃப்.பி. செய்தியாளர்கள் உட்பட பலரிடம் பேசிய உஷாகோவ், அந்த அழைப்பு 90 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்ததாகவும், அது "வெளிப்படையாகவும் தொழில்முறையாகவும்" இருந்ததாகவும் கூறினார்.

"ஈரான் மற்றும் வளைகுடா தொடர்பான சூழ்நிலைக்கு இருநாட்டு அதிபர்கள் சிறப்பு கவனம் செலுத்தினர்" என்று உஷாகோவ் கூறினார்.
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் டொனால்டு டிரம்பின் முடிவை விளாடிமிர் புதின் சரியானதாக கருதுகிறார், ஏனெனில் இது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாய்ப்பளிப்பதோடு, ஒட்டுமொத்தமாக நிலைமையை சீரமைக்கவும் உதவும்.
ஆனால், "அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் இராணுவ நடவடிக்கையில் இறங்கினால், ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தவிர்க்க முடியாத மற்றும் மிகவும் சேதப்படுத்தும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் புதின் சுட்டிக்காட்டினார்," என்று உஷாகோவ் கூறினார்.
மத்திய கிழக்கு போர் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளுக்கு "சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க ரஷ்யா உறுதியாக உள்ளது" என்றும், மாஸ்கோவின் முன்முயற்சியின் பேரிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.