ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்மொழிவு ; நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்தார்.
ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான எரிப்பொருள் சார்ந்த தடைகளை நீக்குதல், லெபனானை உள்ளடக்கிய போர்நிறுத்தம் போன்ற நிபந்தனைகளை ஈரான் குறிப்பிட்டிருந்தது.

மேலும், நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் 7 நாள்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் ஈரான் முன்மொழிந்திருந்தது.
ஆனால், போரில் மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருப்பதால் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறி அந்த முன்மொழிவை ட்ரம்ப் நிராகரித்தார்.
அவர் பேசுகையில், “அவர்கள் (ஈரான்) ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். அது நல்லதுதான். ஆனால், அதேபோல நானும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறேன்.
அது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்கா தங்களது முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்தார்.