ட்ரம்பின் அமெரிக்காவுக்கான பயண தடை நாடுகளின் பட்டியல் வெளியானது
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசின் நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு தடையை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என மூன்று பிரிவாக பயண தடைக்கான நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
நாடுகளின் பட்டியல்
ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன இதன் காரணத்தால் இந்நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பட்டியலில் உள்ள நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் மற்றும் ரஷியா இடம் பெற்றுள்ளதுடன், மியான்மர், பெலாரஸ், ஹைதி, லாவோஸ், எரித்ரியா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன.
இதன்படி வர்த்தக பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். ஆனால், புலம்பெயர்வோர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான விசா விண்ணப்பிப்போர் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த பட்டியலில் உள்ள நபர்கள், விசா பெற தனிநபர் நேர்காணல்களை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.
இது தவிரவும், அங்கோலா, காங்கோ, வனுவாட்டு, காம்பியா, செயின்ட் லூசியா உள்ளிட்ட 22 நாடுகள் மஞ்சள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் தரப்படும். அதற்குள் முறையாக அமெரிக்க விதிகளுக்கு உட்படாவிட்டால், பிற பட்டியல்களுக்கு அவை செல்ல கூடிய அச்சுறுத்தலும் உள்ளன.
ட்ரம்ப் அவருடைய முதல் பதவி காலத்தின்போது, ஈரான், ஈராக் மற்றும் சூடான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு பயண தடைகளை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்த பயண தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.