கனடா பிரதமர் மன்னிப்புக் கோரியதாக கூறும் ட்ரம்ப்: உண்மையா?
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை ஆத்திரமூட்டும் வகையில் கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ தொடர்பில் கனடா பிரதமர் மன்னிப்புக் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவை கனடா தனக்கு ஆதரவாக வெளியிட்டதால் ஆத்திரமடைந்தார் ட்ரம்ப்.
அதைத் தொடர்ந்து, கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார் அவர்.
இந்நிலையில், அந்த வீடியோ தொடர்பில் கனடா பிரதமரான மார்க் கார்னி தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ட்ரம்ப், எனக்கு மார்க் கார்னியுடன் நல்ல நட்பு உள்ளது, அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடருமா என ஊடகவியலாளர்கள் கேட்டபோழுது, தொடராது என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார் ட்ரம்ப்.
உண்மையாகவே மார்க் கார்னி ட்ரம்பிடம் மன்னிப்புக் கோரினாரா என்பதை அறிவதற்காக கனடா ஊடகங்கள் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது, கனடா அமெரிக்க வர்த்தக அமைச்சரான டொமினிக்கின் (Dominic LeBlanc) செய்தித்தொடர்பாளர், இப்போதைக்கு அது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என கூறிவிட்டார்.