அமெரிக்கா, மெக்சிகோ, கனடா வர்த்தக ஒப்பந்தம் அவசியமற்றது - ட்ரம்ப்
அமெரிக்கா–மெக்சிகோ–கனடா வர்த்தக ஒப்பந்தம் (USMCA) அமெரிக்காவுக்கு பொருத்தமற்றது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனை கனடா மட்டுமே விரும்புகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவிற்கே திரும்பி வர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட்டுக்கு செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பயணத்தின் போது, இதனால் எங்களுக்கு எந்த உண்மையான நன்மையும் இல்லை.இது தேவையற்றது என உடன்படிக்கை குறித்து டிரம்ப் கூறினார்.

கனடாவுக்கு இது மிகவும் பிடிக்கும். கனடா இதை விரும்புகிறது. அவர்களுக்கு இது அவசியம், என்றும் அவர் தெரிவித்தார்.
டெட்ராய்ட்டை தலைமையிடமாகக் கொண்ட பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் (GM), ஸ்டெல்லான்டிஸ் ஆகியவை, மெக்சிகோ மற்றும் கனடாவில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்களை பெரிதும் நம்பியுள்ள வழங்கல் சங்கிலிகளை கொண்டுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களும் ஆண்டுதோறும் கனடா மற்றும் மெக்சிகோவில் இலட்சக்கணக்கான வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.
டெஸ்லா, டொயோட்டா, ஃபோர்டு உள்ளிட்ட முக்கிய கார் உற்பத்தியாளர்கள் கடந்த நவம்பரில், USMCA அமெரிக்க வாகனத் தொழிலுக்கு மிக முக்கியம் எனக் கூறி, அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தனர்.