டியாகோ கார்சியா தீவு விவகாரம் ; பிரிட்டன் மீது டிரம்ப் கடும் விமர்சனம்
டியாகோ கார்சியா தீவை மீண்டும் மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்க கூடாது என பிரிட்டனுக்கு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பிரிட்டன், மொரீஷியஸ் நாட்டிடம் அதை திரும்ப ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளது. மொரீஷியஸ் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக இந்த முடிவுக்கு பிரிட்டன் வந்தது.

இந்த விவகாரத்தில், இந்தியாவும் மொரீஷியஸ் நாட்டுக்கு ஆதரவாக துணை நின்றது. இத்தகைய சூழ்நிலையில், தீவை திரும்பவும் மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கவும், குத்தகை அடிப்படையில் பிரிட்டன் அதை பயன்படுத்தவும் கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரிட்டன் இந்த தீவுக் கூட்டத்தை கைப்பற்றிய போது அங்கு அமெரிக்க கடற்படை தளம் அமைக்க அனுமதி கொடுத்துவிட்டது. இப்போதும் அந்த கடற்படை தளம் செயல்படுகிறது.
ஈரான் நாட்டின் மீது போர் நடத்துவதாக இருந்தால் கடற்படை தளம் தமக்கு அவசியமாக இருக்கும் என்று அமெரிக்கா கூறுகிறது. அதனால் இந்த தீவை மீண்டும் மொரீஷியஸ் நாட்டிடம் திரும்ப ஒப்படைக்க கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை கைவிடுவது ஒரு பெரிய தவறு என்று நான் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் கூறி வருகிறேன்.
பிரிட்டனுடன் எங்கள் உறவு வலுவானது. இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக உறவு உள்ளது. பிரதமர் ஸ்டார்மர் இந்த முக்கியமான தீவின் கட்டுப்பாட்டை இழந்து வருகிறார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால், தாக்குதல் நடத்த அமெரிக்கா டியாகோ கார்சியா மற்றும் பேர்போர்டில் அமைந்துள்ள விமானநிலையத்தைப் பயன்படுத்துவது அவசியமாக இருக்கலாம்.
பிரதமர் ஸ்டார்மர் எந்த காரணத்திற்காகவும் டியாகோ கார்சியாவின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது. இந்த நிலத்தை பிரிட்டனிடம் இருந்து பறிக்கக்கூடாது, அது அனுமதிக்கப்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நாங்கள் எப்போதும் பிரிட்டன் உடன் போராடத் தயாராக இருப்போம். டியாகோ கார்சியாவை விட்டுக்கொடுக்காதீர்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.