ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
"உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான எனது சந்திப்புக்கு முன்பு, இன்று மதியம் 1 மணிக்கு, , ரஷிய அதிபர் புதினுடன் ஒரு நல்ல மற்றும் மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிரம்பை சந்திக்கிறேன்.
20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும்.
பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம். முக்கியமான பிரச்சினைகளைப் பொறுத்தவரை, டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து நாங்கள் விவாதிப்போம், மேலும் பிற பிரச்சினைகளையும் நாங்கள் நிச்சயமாக விவாதிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.