ஈரான் மீது போர் தொடுப்பது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ஈரான் உடன் தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து வாஷிங்டன் ஒரு வலுவான உடன்பாட்டை நாடுவதாகவும், ஈரான் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அல்லது பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டால் மீண்டும் போர் தெடுக்க வேண்டியதற்கான அவசியம் இருக்காது.

அதே சமயம், மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கினால், 38 பாலங்கள் உள்பட ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வைத்திருப்பதாக ட்ரம்ப் கூறினார்.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் குறைந்த அளவிலான தாக்குதல்களைக் குறைந்தது இருமுறை நடத்தியுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை மீற முயன்றதாகக் கூறப்படும் வணிகக் கப்பல் ஒன்றின் மீது, சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டு அது செயலிழக்கச் செய்யப்பட்டது.
தேவைப்பட்டால் அமெரிக்கா தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ரூபியோ தெரிவித்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்திற்கோ அல்லது நமது படைகளுக்கோ தெளிவான மற்றும் உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால், நம்மைத் தற்காத்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு என்று ரூபியோ கூறியுள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கை எடுப்பதை நிராகரிக்கவில்லை. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கே கடற்படை கண்ணிவெடிகளில் மோதிய பின்னர் ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
அனைத்து அச்சுறுத்தல்களும் அகற்றப்படும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை மீறியதாகக் கூறப்படும் ஒரு வர்த்தகக் கப்பலை ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.