சீனப் பயணத்தில் தனிப்பட்ட முறையில் புதினை சந்திக்கும் டிரம்ப் ; சர்வதேச அரசியலில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய ஜனாதிபதி புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சீனாவின் ஷென்சென் நகரில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிலிப்பின்ஸிலிருந்து விமானம் மூலம் நவம்பர் 18ஆம் திகதி மாலை ஷென்சென் நகரைச் சென்றடைந்தார்.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதினையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், டிரம்ப் மற்றும் புதின் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்புச் சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்பும் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே, ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், 2025ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் புதின் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவை எட்டவில்லை. இதற்கிடையில், மெக்சிகோ ஜனாதிபதி கிளாவ்டியா ஷெயின்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரையும் டிரம்ப் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' கடந்த பெப்ரவரி மாதம் காலாவதியானது.
இதையடுத்து, சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.