டேலைட் சேவிங்ஸ் டைம் முறையை ரத்து செய்யவுள்ள டிரம்ப்
அமெரிக்காவில் கோடை காலத்தின்போது கிடைக்கும் பகல் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 'டேலைட் சேவிங்ஸ் டைம்' எனப்படும் பகல்நேர சேமிப்பு முறையை ரத்து செய்யப் போவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், கோடை காலத்தின்போது கிடைக்கும் சூரிய வெளிச்ச காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 'டேலைட் சேவிங்ஸ் டைம்' எனப்படும் பகல்நேர சேமிப்பு முறை நடைமுறையில் உள்ளது.
டேலைட் சேவிங்ஸ் டைம்
இதன்படி, மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இருந்து, நவம்பரில் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இது அமலில் இருக்கும். இந்த காலத்தில், உள்ளூர் நேரப்படி காலை 2:00 மணிக்கு, ஒரு மணி நேரம் முன்னதாக கடிகாரங்களில் நேரம் மாற்றிக் கொள்ளப்படும்.
இதன் வாயிலாக இந்த காலகட்டத்தில் கிடைக்கும் பகல் நேரத்தை, அலுவலகம் மற்றும் தொழில் செய்வதற்கு பயன்படுத்த முடியும். இந்த நடைமுறைக்கு, குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அடுத்த மாதம், 20ம் திகதி அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், 'இந்த நடைமுறை, மக்களுக்கு தேவையில்லாத நடைமுறை பிரச்னைகளை உருவாக்குவதுடன், செலவையும் அதிகரிக்கச் செய்கிறது.
எனவே இந்த பகல்நேர சேமிப்பு முறையை ரத்து செய்ய, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.