நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்க தயார் ; ட்ரம்ப்
நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது.

இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ள நேபாளத்தை நாங்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக கூறியுள்ளோம். நேபாளத்துடன் எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது.
இது ஒரு கொடூரமான நிகழ்வு. அது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு பேரழிவு. இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது. மிகவும் வலிமையான உறுதியான கட்டிடங்கள் கூட தீக்குச்சிகளை போல அடித்து செல்லப்பட்டன.
இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு. நாங்கள் உதவிகளை அனுப்பி வருகிறோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று அந்நாட்டு தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.