எண்ணெய் விநியோகத்திற்கு வெவ்வேறு பாதிப்பு ; கியூபாவை எச்சரித்த ட்ரம்ப்
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு கியூபாவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையேல், வெனிசுவேலாவில் இருந்து கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் மற்றும் நிதி விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
எனவே "மிகவும் தாமதமாகும் முன்பே" அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு கியூபாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கியூபா தனது அன்றாட எண்ணெய் தேவையில் சுமார் 50 சதவீதத்திற்கு வெனிசுவேலாவையே நம்பியுள்ளது.
ஆனால், மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, கியூபாவிற்கு இனி "பூச்சியம்" அளவிலேயே எண்ணெய் மற்றும் பணம் செல்லும் என்று ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"கியூபா பல ஆண்டுகளாக வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் பணத்தில் வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக கியூபா அங்குள்ள சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியது.
ஆனால் இனி அது நடக்காது!" மேலும், வெனிசுவேலாவில் கடந்த வாரம் நடந்த அமெரிக்கத் தாக்குதலில், மதுரோவிற்கு பாதுகாப்பு வழங்கிய 32 கியூப வீரர்கள் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
வெனிசுவேலாவிற்கு இனி கியூபாவின் பாதுகாப்புத் தேவை இல்லை என்றும், உலகின் வலிமையான அமெரிக்க இராணுவம் இனி வெனிசுவேலாவைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும், கியூப வம்சாவளியைச் சேர்ந்தவருமான மார்கோ ரூபியோ, கியூபாவின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடும் என்ற சமூக வலைத்தளப் பதிவை ட்ரம்ப் பகிர்ந்து, "அது நன்றாகத்தான் இருக்கும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இது கியூப அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் இந்தச் செயலை "ஒரு சர்வதேச குற்றவியல் நடவடிக்கை" என்று விமர்சித்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட கியூப வீரர்களை "மாவீரர்கள்" என்று கியூப அரசு கௌரவித்துள்ளது.