பெருவெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க சென்ற பெண்மணி மாயம்
ஸ்கொட்லாந்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய தமது நாயை காப்பாற்ற சென்ற பெண் ஒருவர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கொட்லாந்தின் அபெர்தீன்ஷயர் பகுதியிலேயே குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், அந்த பெண்மணியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், அஞ்சலி கூட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல், டான் ஆற்றின் அருகாமையில் கடைசியாக 71 வயதான ஹேசல் நைரன் என்பவரை பார்த்துள்ளனர். தமது வளர்ப்பு நாய் டான் ஆற்றில், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை காண நேர்ந்த அவர், நாயை காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் மாயமானதாக கூறப்படுகிறது. பலத்த மழைக்கு நடுவிலும், ஹேசல் நைரன் தொடர்பில் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வந்துள்ளனர்.
ஞாயிறன்று Monymusk பகுதி தேவாலயத்தில் ஹேசல் நைரன் தொடர்பில் அஞ்சலி கூட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் கன மழை காரணமாக ஆறுகள் பல கரையை உடைத்துக் கொண்டு பாய்வதாக கூறுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.