ஹவாயை தாக்கிய சுனாமி அலை
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய்த் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாக பசிப்பிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சுனாமி அலைகள் இன்று 12.11 மணிக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் 2011ல் ஜப்பானின் புக்குஷிமாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பிறகு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது உள்ளதாக கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலாடேவ் கூறியுள்ளார்.
ஜப்பானில் 9 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில் நுழைந்துள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சுனாமி அலைகள் 30 சென்டிமீட்டர் உயரத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் ஒசாகா முதல் வகயாமா வரை, வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் வரை அலைகள் ஏற்படலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் முன்னதாக எச்சரிக்கை வெளியிட்டது.
இதுவரை எந்தவித உடனடி சேதமும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரை உள்ள 133 நகர சபைகளிலிருந்து, சுமார் 9 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த நிலைமைக்கு இணையான சுனாமி அச்சுறுத்தல் இந்தியப் பெருங்கடலில் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.