கனடிய சந்தைகளிலிருந்து அவசரமாக திரும்பப் பெறப்படும் உணவுப் பொருள்
கனடாவில் விற்பனை செய்யப்படும் பிரபல டர்க்கி கிரேவி தயாரிப்பில், லேபிளில் குறிப்பிடப்படாத கடுகு அடங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அ தயாரிப்புகள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.
கெவின்ஸ் நேச்சுரல் ஃபுட்ஸ் (Kevin’s Natural Foods) பிராண்டின் டர்க்கி கிரேவி தயாரிப்பே இவ்வாறு திரும்பப் பெறப்படுகிறது. இது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் மானிடோபா ஆகிய மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பின் லேபிளில் குறிப்பிடப்படாமல் கடுகு சேர்க்கப்பட்டுள்ளமையால், கடுகு ஒவ்வாமை அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனமே முன்வந்து இந்தத் திரும்பப்பெறும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதுவரை இத்தயாரிப்பைப் பயன்படுத்தியதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடுகு ஒவ்வாமை உள்ளவர்கள் இத்தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கடைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இதனை விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கனடிய உணவு ஆய்வு முகமை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தையிலிருந்து இத்தயாரிப்புகள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதிசெய்து வருகிறது.