ஹங்கேரியில் பஸ் விபத்து: போலந்து யாத்ரீகர்கள் 12 பேர் பலி
ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரேகிஹாசாவுடன் இணைக்கும் எம்3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.

பஸ்ஸில் மொத்தம் 57 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் இருந்த நிலையில், இதுவரை 35 பேரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக ஹங்கேரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
24 தொன் எடையுள்ள பஸ்ஸை முழுமையாக உயர்த்த கிரேன்கள் வரும் வரை, அதற்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க அவசர உதவிப் பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 9 பேர் பலத்த காயங்களுடனும், 37 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மகியர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்கிய சிறப்பு விமானம் ஒன்றை ஹங்கேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலிருந்து திரும்பி வந்த இந்த பஸ்ஸில், போலந்தின் போட்கார்பாசி பிராந்தியத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பயணித்துள்ளதாகப் போலந்து செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்து தொடர்பில் ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.