பர்லிங்டனில் கைபேசிகள் கொள்ளை – 2 சிறார்கள் உட்பட நால்வர் கைது
கனடாவின் பர்லிங்டனில் மேபிள்வியூ ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, இரண்டு 15 வயது சிறார்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு முகமூடியுடன் வந்த சந்தேகநபர்கள் வர்த்கத நிலையத்தின் காட்சிப்பலகைகளில் இருந்த தொலைபேசிகளை கொள்ளையிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை எனவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் டொரொண்டோவில் திருடப்பட்டதாக கூறப்படும் வெள்ளை நிற ஹொண்டா CRV வாகனத்தில் தப்பியதாகவும், ஐந்தாவது நபர் அந்த வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகனம் QEW கிழக்கு வழித்தடத்தில் Brant Street பகுதியில் செல்லும் போது ஓக்க்வில்லில் Trafalgar Road offramp அருகே விபத்துக்குள்ளானது. அந்த விபத்துக்குப் பிறகு ஐவர் தப்ப முயற்சித்தாலும், நால்வர் விரைவில் கைது செய்யப்பட்டனர்.
விபத்தில் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் கடைசியாக காணப்பட்ட ஐந்தாவது சந்தேகநபர், ஸ்பைடர்மேன் முகமூடி மற்றும் கமொஃப்லாஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார் என்றும், அவரை கைது செய்ய போலீசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.