அமெரிக்காவில் பாடசாலையில் இருவர் உயிரைப்பறித்த துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்ஸ் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக டெஸ் மொயின்ஸ் காவல் துறையை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்தவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12:53 மணிக்கு. (உள்ளூர் நேரம்), 455 SW 5வது தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த முறைப்பாட்டிற்கு காவல்துறை மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு மைல்களுக்கு அப்பால், டெஸ் மொயின்ஸ் காவல் துறை பல சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.