பொலிஸ் ரோந்து வாகனம் மீது மோதிய கார் — இரு அதிகாரிகள் காயம்!
கனடாவின் ரொறன்ரோ நகரில், வாகனத் திருட்டு தொடர்பான விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய கார் ஒன்று காவல் துறையின் ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு காவல் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணியளவில், ரெக்ஸ்டேல் பகுதியில் உள்ள இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் எல்ம்ஹர்ஸ்ட் டிரைவ் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை யாரோ உடைக்க முயல்வதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தபோது, அங்கிருந்து இரண்டு வாகனங்கள் அதிவேகமாகத் தப்பிச் செல்வதைக் கண்டனர்.

அப்போது, அதில் ஒரு வாகனம் காவல் துறை ரோந்து வாகனத்தின் மீது பலமாக மோதியது. இச்சம்பவத்தில் காயமடைந்த இரு காவல் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நல்வாய்ப்பாக அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் சந்தேக நபரின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தப்பி ஓடிய இரண்டாவது வாகனத்தைக் காவல் துறையினர் சிறிது தூரம் பின்தொடர்ந்த போதிலும், அது தப்பிச் சென்றுவிட்டது.
அந்த வாகனம் மற்றும் அதில் இருந்த நபர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், இஸ்லிங்டன் மற்றும் டர்பின் அவென்யூக்களுக்கு இடைப்பட்ட எல்ம்ஹர்ஸ்ட் டிரைவ் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அப்பகுதி வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு ரொறன்ரோ காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.