பிலிப்பைன்ஸில் ரகாசா சூறாவளி எதிரொலி ; 36 மணி நேரம் மூடப்பட்டம் விமான நிலையம்
ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியைச் சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்கொங்கை சக்திவாய்ந்த சூறாவளி நெருங்கி வருகிறது. இந்தச் சூறாவளிக்கு ரகாசா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் லுசோன் (Luzon) தீவிலிருந்து வடகிழக்கே 160 கிலோமீற்றர் தொலைவில் இந்த சூறாவளி நிலை கொண்டுள்ளது.
மேலும், இந்தச் சூறாவளி தென் சீனக்கடலில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், மேற்குத் திசையில் ஹொங்கொங்கை நோக்கி நகர்ந்து சீனாவின் தெற்குக் கடற்கரைக்கு நகரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 202 முதல் 221 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி மேற்கு, வட மேற்காக நகர்ந்து கொண்டிருப்பதாக ஹொங்கொங் வானிலை மையம் அறிவித்துள்ளது.
ரகாசா சூறாவளியானது கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதையடுத்து, ஹொங்கொங் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், விமான நிலையத்தை தற்காலிகமாக மூடி விடலாம் என விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று (23) மாலை 6 மணி முதல் 25 ஆம் திகதி காலை 6 மணி வரை, 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். விரைவில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரகாசா புயலின் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ரகாசா சூறாவளி எதிரொலியாக, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பிலிப்பைன்ஸ், மணிலாவில் அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு நேற்று (22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சின் படேன்ஸ், பாபுயன் தீவுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.