பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா திகதி வெளியானது!
பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா திகதியை வெளியிட்டு பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
பிரித்தானியாவில் நீண்ட காலம் ராணியாக இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) கடந்த மாதம் 8-ம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார்.
அதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Coronation of His Majesty The King will take place on Saturday 6 May 2023 at Westminster Abbey.
— The Royal Family (@RoyalFamily) October 11, 2022
The Ceremony will see His Majesty King Charles III crowned alongside The Queen Consort.
இதுதொடர்பாக அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "6 மே 2023 சனிக்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எங்கள் மாட்சிமை மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் எங்கள் மாட்சிமை வாய்ந்த மன்னர் சார்லஸ் III ராணி மனைவியுடன் முடிசூட்டப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு 74 வயதாகிறது.
இதன்மூலம், பிரித்தானியாவின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார். இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.
பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
ராணி இரண்டாம் எலிசபெத் 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தனர்.
ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.