அமேசான் தவளை விஷ மருந்தால் பிரித்தானியர் உயிரிழப்பு
அமேசான் காடுகளில் காணப்படும் விஷத் தவளைகளின் தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட 'காம்போ' (Kambo) என்ற மருந்தை உட்கொண்ட பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்தமை பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், உடலைச் சுத்திகரிக்கும் ஒரு பாரம்பரிய மாற்று மருத்துவ நடைமுறையாக இந்த 'காம்போ' மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமேசான் காடுகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட வகை விஷத் தவளைகளின் தோலில் இருந்து சுரக்கும் திரவத்தைக் கொண்டே இம்மருந்து தயாரிக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் (Leicester) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கிறிஸ்டியன் ட்ரெண்ட் (Kristian Trend) என்பவரே, இவ்வாறு உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக 'காம்போ' மருந்தை உட்கொண்டுள்ளார்.
எனினும், மருந்தை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே அவர் எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்தைத் தொடர்ந்து, மாற்று மருத்துவ முறைகளில் காம்போ போன்ற ஆபத்தான நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியப் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிரித்தானிய மாற்று மருத்துவ சிகிச்சை அமைப்பான British Complementary Medicine Association (BCMA) விடுத்துள்ள விசேட அறிவிப்பில்,
தங்களது உடல்நலம் சார்ந்த தேவைகளுக்குப் பொதுமக்கள் முறையாக அனுமதி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களை மட்டுமே நாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.