லேசான காயங்களுடன் உயிர் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி! நடந்த்து என்ன?
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.
இந்த போர் மூலம் ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.