ரஷ்யா படை தலைவரின் படுகொலைக்கு பொறுப்பேற்ற உக்ரைன்
ரஷ்யா படைகளின் தலைவரின் படுகொலைக்கு உக்ரைன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் அணுச்சக்திப் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் நேற்று காலை மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.
உக்ரேனின் SBU வேவுத்துறை சம்பவத்துக்குப் பொறுப்பேற்றது. குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் வெளியே மின் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தபோது கிரில்லோவும் அவரது உதவியாளரும் மாண்டனர்.
ரஷ்யாவிற்குள் உக்ரேனால் கொல்லப்பட்ட ஆக மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரி கிரில்லோவ். அதேவேளை உயிரிழந்த ரஷ்ய படை தலைவர் உக்ரேன் படைகள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பிரபல ரஷ்ய ஆயுத நிபுணர் மிக்காயல் ஷாட்ஸ்கி சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாக அவரது கொலை நடந்துள்ளது. ஷாட்ஸ்கி மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே உக்ரேனின் ராணுவ வேவுத்துறையால் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.