உக்ரைனை தாக்கிய 376 ட்ரோன்கள் ; பல்லாயிரம் கோடி நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய மதிப்பில் ரூ. 68,000 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே இராணுவ ஆதரவை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “உக்ரைனின் சுதந்திர நாளான இன்று அவர்களுக்கு முக்கியத் தேவையாக உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ரேடார்களுக்காக ரூ. 68,000 கோடி நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்த நிதி அவர்களுக்கான 90 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியாகும். இதில், ராணுவ உதவிக்கான 60 பில்லியன் யூரோவும் அடங்கும்.
இது முழுவதும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்கனவே 16 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு அதில் 8.5 பில்லியன் உக்ரைனுக்கு முன்பே அனுப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது 376 ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ள நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் தனது நகரங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க, குறிப்பாக பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஆயுதங்களை அதிகளவில் வாங்கவுள்ளது.