ரஷ்யா தாக்குதலில் இருளில் மூழ்கயுள்ள உக்ரைன்!
மின் நிலையங்கள் அழிக்கப்பட்டதால் உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் அண்மையில் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனை அழிப்பது ரஷ்யாவின் நோக்கம் அல்ல என்றும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என்று தெரிவித்த அவர், உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யா எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த அக்டோபர் 10-ஆம் திகதி முதல் ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், இதன் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்று ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) திட்டவட்டமாக கூறியுள்ளார்.