ரஷ்யாவின் போர் நிறுத்தம் உக்ரைனால் நிராகரிப்பு
ரஷ்யா அறிவித்துள்ள மூன்று நாட்கள் யுத்த நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி அணிவகுப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யுத்த நிறுத்தத்தை ரஷ்யா ஜனாதிபதி விளடிமிர் புட்டின் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் இப்போர் நிறுத்தத்தை நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் அழைப்பின் பேரில் 09 ஆம் திகதி செஞ்சதுக்க அணிவகுப்பைக் காண வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
ரஷ்ய பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, அவர்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.