241 பயணிகளுடன் உக்ரைனிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தால் இந்திய தூதகரம் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திருப்புமாறு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் 241 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அண்டை நாடான ரஷ்யா நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன.
உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு (Vladimir Putin) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட கூடும் என்ற அச்சத்தினால் பல்வேறு நாடுகளும் தூதர்களை திரும்ப பெற்றுள்ளன.
இந்தியா உள்பட பல நாடுகள் தங்களுடைய குடிமகன்களை நாடு திரும்ப கேட்டு கொண்டுள்ளது. இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட பலரை ஏற்றி கொண்டு நாடு திரும்புகிறது. இதன்படி, 241 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு இன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானம் 10.15 மணிக்கு இந்தியா வரவேண்டும்.
ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒன்றரை மணிநேரம் காலதாமதத்துடன் இரவு 11.30 மணிக்கு விமானம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.