வான் தாக்குதலால் அதிரும் உக்ரைன்; உலகநாடுகளிடம் மன்றாடும் அதிபர்
இரண்டாவது நாளாக இன்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார். தலைநகர் கீவின் மேல் வான் தாக்குதல் சைரன்கள் அலறியவண்ணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன. அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதாக புதின் கருதும் உக்ரைனைக் கைப்பற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி வீடியோ ஒன்றில் , “எதிரி என்னை நம்பர் ஒன் இலக்காகக் குறித்துள்ளது, எனது குடும்பமே இரண்டாவது இலக்கு. அவர்கள் என்னை அழித்து உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கிறார்கள்." "நான் தலைநகரில் தங்குவேன். என் குடும்பமும் உக்ரைனில் உள்ளது." என கூறியுள்ளார்.
அதேவேளை "கிய்வ் மீது பயங்கரமான ரஷ்ய ராக்கெட் தாக்குதல்" என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் எழுதினார்.
அத்துடன் "கடைசியாக 1941 ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனியால் தாக்கப்பட்ட போது நமது தலைநகரம் இதுபோன்ற தாக்குதலைச் சந்தித்ததாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.