உக்ரைன் நீதித்துறை அமைச்சர் பணியிடைநீக்கம்
உக்ரைன் அரசின் நீதித்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்சென்கோ, அரசின் அணுக்கரு ஆற்றல் நிறுவனம் எனர்கோஅட்டோம் (Energoatom) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கலுஷ்சென்கோவின் கடமைகள் தற்காலிகமாக ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பிரிவு துணை நீதித்துறை அமைச்சர் லியுட்மிலா சுகக்கினால் (Lyudmyla Sugak) மேற்கொள்ளப்படும் என பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார்.
கலுஷ்சென்கோ, கடந்த ஜூலை மாதம் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும்முன் நான்கு ஆண்டுகள் சக்திவள அமைச்சராக பணியாற்றியவர். அவர், எனர்கோஅட்டோம் நிறுவனத்தின் மூலம் பணம் சலவை செய்யப்பட்ட ஊழல் திட்டத்தில் நன்மை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சோதனை
உக்ரைன் ப்ராவ்டா (Ukrainska Pravda) செய்தியின்படி, ஊழல் எதிர்ப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை கலுஷ்சென்கோவின் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
பிரதமருடன் பேசிவிட்டு, விசாரணை நடைபெறும் காலத்தில் இடைநீக்கம் செய்யப்படுவது சரியான முடிவாகும் என ஒப்புக்கொண்டேன். விசாரணை முடியும் வரை இது நாகரிகமான நடவடிக்கையாகும். நீதிமன்றத்தில் நான் என் நிலைப்பாட்டை நிரூபிப்பேன் என லுஷ்சென்கோ தெரிவித்துள்ளார்.
இந்த 100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியின் நெருங்கிய நண்பர் திமூர் மிண்டிச் (Timur Mindich) வடிவமைத்ததாக உக்ரைனின் சிறப்பு ஊழல் விசாரணை அலுவலகம் (SAPO) தெரிவித்துள்ளது.
SAPO விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, கலுஷ்சென்கோ, சக்திவளத் துறையில் மிண்டிசின் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளை முகாமை செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், எனர்கோஅட்டோம் நிறுவனத்துடன் பணிபுரியும் ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தங்களை இழக்காமல் இருக்கவும் அல்லது கட்டண தாமதத்தை தவிர்க்கவும் 10–15% வரை லஞ்சம் வழங்க வேண்டியதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் தற்போது ரஷ்ய தாக்குதல்களால் மின் வலையமைப்பு கடுமையாக சேதமடைந்து, பெரும்பாலான பகுதிகளில் தினசரி நீண்ட மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளதால், சக்திவளத் துறையில் இடம்பெறும் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை எனக் கருதப்படுகிறது.
இந்த ஊழல் விவகாரம், உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பினர் சேர்க்கை முயற்சிக்கும் பெரிய சவாலாகவும் மாறியுள்ளது.
ஊழலை முற்றிலும் ஒழிப்பது, அந்த முயற்சிக்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.