பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கோரிய நடுவர்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் - பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது இரு அணி வீரர்களும் கை குலுக்கவில்லை.
குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்கி கொள்ள முன் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் விளைவாக ஐக்கிய அரபு இராச்சியம் - பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், போட்டி நடுவராக இருக்கும் ஆண்டி பைக்ராஃப்டை ஆசியக் கிண்ணப் போட்டிக்கான நடுவர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், போட்டியின் நடுவர் பதவியிலிருந்து ஆண்டி பைக்ராஃப்டை ( Andy Pycroft ) நீக்கச் சர்வதேச கிரிக்கெட் சபை (icc) மறுப்பு தெரிவித்தமையினால் குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், குறித்த நேரத்தில் இந்த போட்டிகள் ஆரம்பமாகும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மற்றும் அணித்தலைவரிடம் ஆண்டி பைக்ராஃப் மன்னிப்பு கோரியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து குறித்த போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.