ஐரோப்பியாவில் மிகப்பெரிய போருக்கு திட்டமிடும் ரஷ்யா : பிரித்தானிய பிரதமர் விமர்சனம்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அண்டை நாடுகள் மீதும் புடின் படையெடுப்பார் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் (Liz Truss) கூறியுள்ளார்.
1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பியாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) விமர்சித்துள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா போர் பயிற்சி மேற்கொண்டது.
மேலும், உக்ரைன் எல்லையில் 1 இலட்சத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்களை ரஷ்யா குவித்ததால், போர் பதற்றம் உருவானது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதால் ஒருசில படைகளை திரும்ப பெற்றதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், உக்ரைன் எல்லைப்பகுதியில் 1 இலட்சத்து 50 ஆயிரம் முதல், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீரர்களை ரஷ்யா தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், 1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பியாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதைதான் அனைத்து அறிகுறிகளும் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அண்டை நாடுகள் மீதும் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin) படையெடுப்பார் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் (Liz Truss) கூறியுள்ளார்.