ஈரானின் ஏவுகணைகள் கட்டாரிலுள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா
ஈரானின் ஏவுகணைகள் கட்டாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது.
12 நாட்கள் நீடித்த இந்த போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக கட்டாரிலுள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கட்டாரில் உள்ள அல் அடிட் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த விமானப்படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பால் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகள் கட்டாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமானப்படைத்தளம் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இன்று (12) தெரிவித்துள்ளார்.