தரையிறங்கும் போது தனியாக கழன்று விழுந்த விமான சக்கரம்; தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்!
அமெரிக்காவின் சிகாகோவின் ஓ'ஹேர் விமான நிலையத்திலிருந்து ஆர்லாண்டோவிற்கு 178 பயணிகளுடன் பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA2323, தரையிறங்கும் போது ஒரு பெரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த காற்று வீசிய சூழலில் இந்த விமானம் தரையிறங்கியது.

தனியாக கழன்று ஓடுதளத்தில் விழுந்த முன் பக்கச் சக்கரம்
அப்போது ஏற்பட்ட கடுமையான குலுக்கலில், விமானத்தின் முன் பக்கச் சக்கரம் தனியாக கழன்று ஓடுதளத்தில் விழுந்தது.
இதனால் விமானம் ஓடுதளத்திலிருந்து சற்று விலகி சென்றது, எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து, பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் ஓடுதளத்திலேயே விமானத்திற்குள் காத்திருக்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பேருந்துகள் மூலம் முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பலத்த குறுக்கு காற்று வீசியது இந்த இயந்திரக் கோளாறுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவின் எஃப்.ஏ.ஏ அமைப்பு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு விமானத்தின் பாகங்கள் சரியாக பராமரிக்கப்பட்டதா அல்லது வானிலை காரணமாக இந்த முறிவு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.